By September 26, 20170 CommentsReport

கங்கணாவுடன் என்னை ஒப்பிடாதீர்கள்..!!

பாலிவுட்டில் கங்கணா ரனாவத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘குயின்’. தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற தலைப்பில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், சஷி வருண் நாயகனாகவும் நடிக்கவிருக்கின்றனர். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படத்தை மனு குமாரனின் மீடியன்ட் மற்றும் மனோஜ் கேசவனின் லைகர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளனர். அதோடு ஒரே சமயத்தில் வெளியிடவும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நான்கு மொழிகளிலும் நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். தமிழ் மற்றும் கன்னட படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார். காஜல் அகர்வால் , பரூல் யாதவ் முறையே தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிக்கவுள்ளனர்.

குயின் படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதி இந்தப் படங்களுக்கு இசையமைக்கவுள்ளார். தமிழில் பாடல்கள் மற்றும் வசனத்தை தமிழச்சி தங்கப்பாண்டியன் கவனிக்கிறார். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவாளராகவும், குணா கென்னெடி ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்றவுள்ளனர். இதன் தெலுங்கு மற்றும் மலையாள ரீமேக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்கி ஜனவரியில் முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. விருதுநகர், பாரிஸ், லண்டன் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண் தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம் அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுயஅடையாளத்தைக் கண்டுகொள்கிறாள் என்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் வாழும் ஒரு பெண்ணை மையமாகக்கொண்டு பயணிக்கும் இக்கதையில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் பாரிஸ் படத்தின் துவக்கவிழா நேற்று(செப்.24) சென்னை வடபழனியில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற்றது. இதில் காஜல் அகர்வால், ரமேஷ் அரவிந்த், தமிழச்சி தங்கப்பாண்டியன், மனு குமரன், மனோஜ் கேசவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்படம் குறித்து காஜல் அகர்வால், “இந்த படத்தில் நடிப்பதற்கு நான் மனப்பூர்வமாகக் காத்திருக்கிறேன். இப்படத்தின் ஒரிஜினல் படத்தைப் பார்த்தபோது மிகுந்த உற்சாகமாக இருந்தது. அந்தப் படத்தை ரீமேக் செய்து எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய தனித்துவமான உடல் மொழியையும், நடிப்பையும் வெளிக்காட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரியான மாற்றங்கள் மட்டுமல்லாமல் நல்ல சமூக கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் பாரிஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

‘குயின்’ படத்தில் நடித்ததற்காகக் கங்கணா தேசிய விருது பெற்றார். தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கும்போது உங்கள் நடிப்பை அவருடன் ஒப்பீடு செய்ய வாய்ப்புள்ளதே? என்று கேட்டதற்கு, “கண்டிப்பாக ஒப்பிட வாய்ப்பு உள்ளது. நான் கங்கணா ரனாவத்தின் நடிப்பைக் காப்பியடிக்க போவதில்லை. என்னுடைய ஸ்டைலில் நடிப்பேன். யாரையும் பின்பற்றி நடிக்கப் போவதில்லை. எனவே என்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது. எனது சினிமா கேரியரில் பாரிஸ் பாரிஸ் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ரமேஷ் அரவிந்த், “கதாநாயகியை பிரதானமாக கொண்ட இந்தப் படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்த போது நாங்கள் காஜலை தேர்வு செய்தோம். அழகு, ஆற்றல், ஆர்வம் நிறைந்த ஒரு நடிகை. எதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர். இவர் நடித்த மகதீரா, விவேகம் படத்தை பார்க்கும் போது இவருடைய நடிப்பை நாம் அறிந்துகொள்ள முடியும். எனவே தான் இவரைத் தேர்ந்தெடுத்தோம்” என்று கூறினார்.

தொடர்ந்து, “விருதுநகர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கூறும் கதை என்பதாலும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்பதாலும் ஒரு பெண் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதற்காகவே தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களை வசனம் எழுதக் கேட்டுக்கொண்டேன். அவரும் இந்த படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்” என்று தெரிவித்தார்.

‘குயின்’ திரைப்படம் 12.5 கோடி முதலீட்டில் தயாராகி 97 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளைப் பெற்றது. தற்போது ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாரித்து ஒரே நாளில் வெளியிடவுள்ள ‘குயின்’ ரீமேக் படங்கள் என்ன சாதனை படைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*