By October 1, 20170 CommentsReport

அப்பாவுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்..!!

கௌதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹர ஹர மஹா தேவகி’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதைத் தொடந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘இந்திரஜித்’ திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. தற்போது திரு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கௌதம் கார்த்திக்கும் அவரது தந்தை கார்த்திக்கும் முதன்முறையாக இணைகின்றனர்.

இதுகுறித்து இயக்குநர் திரு, TOI-க்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த படத்தின் கதை அப்பா – மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றியே நடக்கும். முதல் பாதிக்குப் பின்னர் இரண்டாம் பாதி ஆக்ஷன் கதையாக இருக்கும். கௌதமும், அவரது அப்பாவும் நடிகருமான கார்த்திக் சாரும் இதில் ஜாலியான தந்தை – மகன் உறவு முறையில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக நடித்திருக்கிறார்கள். கௌதம் குத்துச்சண்டை வீரராகவும், கார்த்திக் சார் அரசு அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கௌதமுடன் நடிப்பதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ள கார்த்திக், “கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கௌதமுக்குத் தொடக்கத்தில் பெரிதாக படங்கள் ஹிட்டாகவில்லை. ஆனால், தற்போது அவர் சிறப்பான முறையில் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் படம் இயக்குவதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஒருநாள் கௌதம் என்னிடம், இயக்குநர் திரு நல்ல கதை வைத்திருக்கிறார் என்று கதையைச் சொன்னார். கதை எனக்குப் பிடித்துபோகவே, எப்போது ஷூட்டிங் என்று திருவிடம் தொடர்புகொண்டு பேசினேன்” என்று கூறியுள்ளார்.

தனது அப்பாவுடன் முதன்முறையாக இணையவிருக்கும் கௌதம், “என்னுடைய அப்பா என்பதைத் தாண்டியும், மிகப்பெரிய நடிகரோடு நடிக்கப் போகிறோம் என்கிற மனநிலைதான் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் எனக்குப் பதற்றமே அதிகமாக இருக்கிறது. எனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், படத்தின் நடிகை மற்றும் இதர கலைஞர்கள் குறித்தான தகவல் விரைவில் வெளிவருமெனவும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*