சூர்யா: ரசிகர்களுக்கு அட்வைஸ்..!! (வீடியோ)
சென்னையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு காரில் வீட்டிற்குத் திரும்பிய நடிகர் சூர்யாவை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், மிக வேகமாக பின் தொடர்ந்திருக்கிறார்கள். இச்செய்கையை கவனித்துக் கொண்டிருந்த சூர்யா, காரை நிறுத்திவிட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சினிமா பிரபலங்கள் பொது வெளிகளுக்கு வரும்போது அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலிலும், தங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் ரசிகர்கள் சூழ்ந்துகொள்ளப்படுவது இயல்பான ஒன்று தான். அந்தவகையில் நேற்று (அக்.02) இரவு சென்னையில் பயணம் செய்துகொண்டிருந்த சூர்யாவை பின் தொடர்ந்துள்ள ரசிகர்கள் அச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சூர்யா, “உங்களுடைய அன்புக்கு நன்றி. இப்படி வேகமாகப் போவது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. தயவு செய்து வேகத்தோடு விளையாடாதீர்கள். உங்களைக் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டு கொள்கிறேன். வேகமாக வராதீர்கள்; வேகமாகவும் ஓட்டாதீர்கள். என் மீது அன்பிருந்தால் நான் சொல்வதை கேளுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார். சூர்யாவின் இந்த அறிவுரையை கேட்டு அவர்கள் பின்தொடருவதை நிறுத்தியுள்ளனர்.