சோலோ: திறமைகளின் சங்கமம்..!!
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வியாழன் (அக்டோபர் 5) அன்று வெளியாகவுள்ளது சோலோ திரைப்படம். பல்வேறு திரையுலகக் கலைஞர்கள் ஒன்றிணைந்ததன் மூலம் இந்தப் படம் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள படத்தில் நேகா ஷர்மா, தினோ மொரியா, சாய் தம்ஹன்கர், தன்ஷிகா, ஸ்ருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
சோலோ குறித்து துல்கர் சல்மான் IANS-க்கு அளித்த பேட்டியில், “பிரம்மாண்ட நட்சத்திரங்கள் பங்குபெற்று வேறுபட்ட படமாக உருவாகியுள்ளது. நேகா, தினோ ஆகியோர் பாலிவுட்டில் இருந்து வந்துள்ளனர். சாய் தம்ஹன்கர் மராத்தியிலிருந்து வந்துள்ளார். ஸ்ருதி ஹரிகரன் கன்னடத்திலிருந்தும் நான் மலையாளத்திலிருந்தும் வந்துள்ளேன். திறமையான கலைஞர்கள் ஒன்றுசேர்ந்திருப்பது படத்தை சுவாரஸ்யமாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பதற்காக பிஜாய் நம்பியாருக்கு நன்றி கூறும் துல்கர், “அவர் பிரபலமான இயக்குநர். அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நடிக்கவைக்கலாம். அவர் என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பட உருவாக்கத்தின் போது எங்களுக்குள் வாழ்நாள் முழுவதும் தொடரும்படியான பிணைப்பு உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
“ஒரே நேரத்தில் இரு மொழிகளில் படப்பிடிப்பு நடத்துவது எளிமையானதல்ல. ஆனால் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இதைச் செய்து முடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது” என்றவர், “என் திரை வாழ்வில் இது பெரிய ஓப்பனிங்காக இருக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.