By October 6, 20170 CommentsReport

சமந்தா – சைதன்யா: காதல் முதல் கல்யாணம் வரை..!!

சினிமாத்தனமான காதல் என்பதிலிருந்து விலகி, அடம்பிடிக்கும் காதலை அறிமுகப்படுத்தியவர் கௌதம் மேனன். பார்த்ததும் காதலா என்று அன்றைய சினிமாவைக் கிண்டல் செய்யும் டீனேஜ்களுக்கு அதே காதலை புதிய முறையில் கொண்டுசேர்த்த பெருமை கௌதம் மேனனுக்கு உண்டு. பெரும்பாலும் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஹீரோக்களாக இருந்தாலும், அவர்களை ரசிக்கக்கூடிய விதத்தில் உருவாக்கியதே கௌதம் மேனனின் மேஜிக் என இப்போது வரையிலும் அழைக்கப்படுகிறது.

கௌதம் மேனனின் திரைப்படத்தால் இணைந்த காதல் ஜோடி எனச் சொன்னால் முதலில் வந்து நிற்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இப்போது அடுத்தபடியாக இந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பது சமந்தா – நாக சைதன்யா.

2009ஆம் ஆண்டு வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் அறிமுகமானார்கள் சமந்தாவும், நாக சைதன்யாவும். அவர்களது கெமிஸ்ட்ரி உருவாக்கிய வைபரேஷன் சில கிசுகிசுக்களையும் கரைசேர்த்தது. ஆனால், அவை காலப்போக்கில் மற்ற கிசுகிசுக்களால் காணாமல் போயின. அதன்பிறகு ஆறு வருடங்களுக்குப் பிறகு, இவர்களுக்கிடையேயான முதல் காதல் வதந்தி உருவானது 2015ஆம் ஆண்டு ஒரு ட்விட்டர் அரட்டையில். 2010இல் செய்தது போலவே, பல பெண்களை மயக்கம் போட வைக்கும் அளவுக்கு இந்தப் படத்தின் டீசரும் இருக்கிறது. வாழ்த்துகள் என்று அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான சாஹசம் ஸ்வாசஹா சாகிபோ படத்தின் டீசரைப் பார்த்துவிட்டு சமந்தா ட்வீட் செய்தார். இதற்கு நீ மயக்கத்தில் இருக்கும் வரை எனக்குப் போதும் என்று சைதன்யா பதிலளித்தார். இதில் பற்றிய வதந்தி போகப்போக பெரிதாகியது.

அதிலும் எனக்கு வரப்போகும் கணவர் ஒரு நடிகராகவும் இருக்கலாம். தெலுங்கு சினிமாவிலும் இருக்கலாம் என சமந்தா கொடுத்த பேட்டி கிட்டத்தட்ட இவர்களுக்கிடையேயான காதலை உறுதியாக்கியபோது, சைதன்யா தனக்கான துணையைக் கண்டுபிடித்து விட்டார் என நாகார்ஜுனா பதிவு செய்த ட்வீட் இவர்கள் திருமணத்தையே உண்மையாக்கி செய்திகள் வெளியாக வைத்தது.

முதன்முறையாக நிம்மக்கண்டா பிரசாத்தின் மகள் திருமணத்தில் சமந்தாவும் சைதன்யாவும் ஜோடியாக வருகை தந்தது நாகார்ஜுனாவைப் பேசவைத்தது. 2016ஆம் வருடத்திலேயே திருமணம் நடைபெற்றுவிடும் என்று வெளியான செய்திகள், சமந்தாவின் நடிப்புத் தொழிலைப் பாதித்தது. International Business Timesக்கு அளித்த பேட்டியில் திருமணத்துக்கு இன்னும் எவ்வளவோ நாள்கள் இருக்கும்போது ஏன் அவசரப்பட வேண்டும். குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது ஆசியுடனும் எங்கள் திருமணம் நடைபெறும். ஆனால், கண்டிப்பாக 2016ல் இல்லை என சமந்தா அறிவித்தபின் ஏராளமான படங்கள் அவரைத் தேடிச் சென்றன.

படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே சமந்தா – சைதன்யாவின் நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தென்னிந்தியத் திரையுலகமே பார்த்து மகிழும் ஜோடியாக வெளிநாடுகளுக்கும், இந்தியாவுக்குள்ளும் இவர்கள் இருவரும் சுற்றிவந்தனர். அப்போது அவர்களது காதல் அதிகமாக பகிரப்பட்ட கோவாவைத் திருமண இடமாகத் தேர்ந்தெடுத்தனர். இதோ இன்று இரவு தொடங்கும் இவர்களது திருமண விழா நாளை வரை தொடரப்போகிறது. இன்று மாலை மெஹந்தி போடுவதில் தொடங்கி, இந்து முறைப்படி திருமணமும், கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் கோவாவில் நடைபெற, பிரமாண்டமான வரவேற்பை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*