தயாரிப்பாளரான சின்னத்திரை நீலிமா..!!
தமிழ் சினிமாவுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி தயாரிப்பாளராக அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
1992ம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படம் மூலம் அறிமுகமான நீலிமா, பாண்டவர் பூமி, விரும்புகிறேன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்னர் தம், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், குற்றம் 23 உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்தார். இருப்பினும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது வெள்ளித்திரையை விட சின்னத்திரையே. வாணி ராணி தொடர் மூலம் தமிழ் மக்களின் குடும்பங்களுக்குள் சென்ற இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘நிறம் மாறாத பூக்கள்’ தொடரை முதன்முறையாக தயாரிக்கிறார். இந்த தொடர் நாளை (அக்டோபர் 9) முதல் தினந்தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த அறிவிப்பை நீலிமா யூ டியூப் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். “80 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளேன். தயாரிப்பு நிறுவனம் தொடங்கவேண்டும் என்பது என் இருபது ஆண்டு கனவு. எனது கணவர் இசை வாணனும் நானும் இணைந்து ‘இசை பிக்சர்ஸ்’ என்ற பெயரில் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். நிறம் மாறாத பூக்கள் முக்கோண காதல் கதையை கொண்டது. முரளி, நிஷ்மா, அஷ்மிதா ஆகியோர் நடிக்கின்றனர். முட்டம், நாகர் கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தொடரின் தரத்தை மட்டுமே மனதில் கொண்டு படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
நீலிமா சீரியல் தயாரிப்போடு திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளார். ஸ்கிரிப்ட் முடிவு செய்யும் பணியில் இருக்கும் அவர் விரைவில் திரைப்பட தயாரிப்பு அறிவிப்பை வெளியிடவுள்ளார்.