பாடகியாகும் பிரபல தயாரிப்பாளர்..!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஐஸ்வர்யா, கூத்தன் படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஐஸ்வர்யா இரு பாடல்களைப் பாடியுள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் ஒரு பாடலை நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் பாடியுள்ளார்.கூத்தன் படத்தின் இசையமைப்பாளர் பாலாஜி பாடல்கள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “முதலில் ஒரு பாடலைப் பாடுவதற்காகத்தான் ஐஸ்வர்யாவை அணுகினோம். அவரது குரல்வளம் மிகவும் பிடித்துப் போகவே, இரண்டு பாடல்களைப் பாடவைத்தோம்” என்று தெரிவித்துள்ளார். ஒரு பாடல் கர்நாடக இசையைச் சார்ந்ததாகவும் மற்றொரு பாடல் மேற்கத்திய இசையைச் சார்ந்ததாகவும் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஐஸ்வர்யா யுவன்ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கில் ஆக்ஸிஜன் என்ற படத்தில் இரு பாடல்களைப் பாடுகிறார். கூத்தன் படம் மியூசிக்கல் டிராமா வகையைச் சேர்ந்தது. நடனக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் படமாக இது அமைந்துள்ளது. ஏ.எல்.வெங்கி இயக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். நடனக் கலைஞரான நாகேந்திர பிரசாத் வில்லனாக நடிக்கிறார். நீல்கிரிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.
ஐஸ்வர்யா, இயக்குநர் ஏ.எம் .ஜோதி கிருஷ்ணாவின் மனைவி. இவர் ஏற்கனவே அஜித் நடித்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களுடன் சில தெலுங்குப் படங்களையும் தயாரித்துள்ளார்.