ராஜமௌலி: புதிய படம் அறிவிப்பு..!!
சரித்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகிவரும் பத்மாவதி திரைப்படம் அருமையாக வந்துள்ளதற்காக அதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு பாகுபலி இயக்குநர் ராஜமௌலி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது புதிய படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
ஷாகித் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பத்மாவதி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தை ஒத்திருக்கிறது என்று பரவலாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பாகுபலி படத்தின் இயக்குநரே படத்தையும் அதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மிக அழகாக வந்துள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் கச்சிதமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது அடுத்த படம் பற்றிய எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த ராஜமௌலி தற்போது முதன்முறையாக அடுத்த இரு படங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில், “சமூக அக்கறையுடன் கூடிய படமொன்றை முதலில் இயக்கவுள்ளேன். இதனை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து 2019இல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளேன். இதை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
தனது அடுத்த படம் எந்த மொழியில் இருக்கும், யார் நடிக்கவுள்ளார்கள் உள்ளிட்ட எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் ராஜமெளலி.