நயன்தாரா படத்தில் நான் இல்லை! : ரெஜினா..!!
தெலுங்கில் பூரி ஜெகன்நாத்தின் பைசா வசூல் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இது பாலகிருஷ்ணாவின் 102-வது படமாம். தெலுங்கில் மட்டுமே உருவாகும் இதனை சி.கே.எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் சி.கல்யாண் தயாரிக்கிறார்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் சில படங்களில் பணியாற்றிய எம்.ரத்னம் இதற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் நடாஷா டோஷி, ஹரி ப்ரியா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். சிரந்தன் பட் இசையமைக்கும் இதற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இதில் நடிகை ரெஜினாவும் நடிப்பதாக தெலுங்கு திரையுலகில் ஒரு வதந்தி பரவியது. தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என ரெஜினாவே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.