2.0 படத்தில் நடிக்க மறுத்த ஆமீர்கான்..!!
2.0 படத்தில் நடிக்க ரஜினியும் ஷங்கரும் அழைத்தும் தான் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார் நடிகர் ஆமீர்கான்.
இஸட் நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்டோபர் 20) கலந்துகொண்ட நடிகர் ஆமீர் கான், “ நான் ஷங்கர் சார் மற்றும் ரஜினியின் மிகப் பெரிய ரசிகன். 2.0 படத்தில் நடிக்குமாறு ஷங்கர் என்னை அழைத்தார். ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தில் என்னை நடிக்குமாறு கூறினார். ரஜினி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் 2.0 படத்தில் என்னை நடிக்க வைக்குமாறு ஷங்கரிடம் தெரிவித்துள்ளார். ரஜினியே எனக்கு போன் செய்து 2.0 படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். 2.0 படத்தின் ஸ்க்ரிப்ட் சூப்பர். ஆனால் படத்தை பற்றி நினைத்தாலே ரஜினி சார் தான் என் நினைவுக்கு வந்தார். என்னை அவர் கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. 2.0 நிச்சயம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று தெரிந்தே அந்த படத்தில் நடிக்க மறுத்தது கடினமான முடிவு” என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், ஏமிஜாக்சன் நடிக்கும் 2.0 திரைப்படம் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவரும் இப்படம் உலகெங்கிலும் 15 மொழிகளில் 2018 ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.