மெர்சல்: காட்சிகளை நீக்குகிறது படக்குழு..!!
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பழிப்பு, மருத்துவத் துறை போன்றவை குறித்து இடம்பெற்றிருக்கும் விமர்சனக் கருத்துகளுக்கு பாஜக தலைவர்களும் சில மருத்துவர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்துவருவதோடு அந்தக் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிவருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் காட்சிகள் எதையும் நீக்க வேண்டிய அவசியமில்லை, தணிக்கை செய்யப்பட்ட பிறகே படம் திரையிடப்பட்டுள்ளது என்று ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி, கமல்ஹாசன், விஷால், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பல அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவதோடு, சினிமா ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
தணிக்கைச் சான்று பெற்று வெளியான ஒரு திரைப்படத்தில் காட்சிகளை நீக்கவோ, சேர்க்கவோ அல்லது ஏதேனும் மாற்றம் செய்யவோ ‘சினிமாடோகிராபி சட்டம் 33’இன்படி தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநருக்கு நேரடி அதிகாரம் இல்லை. ஆனால் தணிக்கைக் குழுவின் ஒப்புதலை பெற்று திருத்தங்களைச் செய்யலாம்.
இது குறித்து தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரி மதியழகன், “தணிக்கை செய்யப்பட்ட படத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய தயாரிப்பாளர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதற்காகத் தணிக்கைக் குழுவிடம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னரே தணிக்கைக் குழுவின் மேற்பார்வையில் காட்சிகளை நீக்கவோ, சேர்க்கவோ முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மெர்சல் பட சர்ச்சை குறித்துப் பேசிய அவர், “மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து எழுத்துபூர்வமான புகார்களோ அல்லது காட்சிகள் நீக்குவது குறித்த விண்ணப்பங்களோ இதுவரையில் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
வரும் அக்.23 அல்லது 24 ஆம் தேதி அன்று படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாரிப்பாளர் தரப்பில் தணிக்கைக் குழுவிடம் விண்ணப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. பல்வேறு தரப்பிலிருந்து மெர்சல் படத்துக்கு அதரவு கிடைத்துவரும் நிலையில் படத்தின் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்துள்ள தகவல் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் எடுத்துவரும் ‘சங்கமித்ரா’, சந்தானம் நடிக்கும் படம் என அடுத்தடுத்துப் பல படங்களைத் தயாரித்துவருவதால் அந்தப் படங்களுக்கு அரசால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது.
மெர்சல் படத்திலுள்ள காட்சிகளை நீக்குவது குறித்து தேனாண்டாள் நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதம்: