By October 22, 20170 CommentsReport

மெர்சலுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி, கரு.பழனியப்பன்..!!

மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி, கரு.பழனியப்பன் ஆகியோரும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்தான வசனங்கள் மத்திய அரசை விமர்சிப்பதுபோல் இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என தமிழிசை

சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தமிழகத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மெர்சல் திரைப்படம் குறித்தும் அதில் நடித்திருந்த விஜய் குறித்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மெர்சல் பட வசனம் நடிகர் விஜய்யின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது என விமர்சித்திருந்தார். இதுபோல், “சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம் ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்” என விஜயை மத ரீதியாகவும் விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜய் கிறிஸ்தவர் என்பதைச் சுட்டுக்காட்டும் விதமாக ஜோசப் விஜய் என ஹெச். ராஜா பதிவிட்டுள்ளதற்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் தற்போது மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் கரு.பழனியப்பன் இன்று (அக்டோபர் 21) தன் ட்விட்டர் பக்கத்தில், “ஜோசப் விஜய், ஜூனைத் ஜமீலா, ஜனநாதன், ஜக்கம்மா என எல்லோரும் சேர்ந்து இருப்பதுதானே இந்தியா? இல்லையெனில் சொல்லிவிடுங்கள்; நாங்கள் தமிழர்களாய் வாழ்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போல் நடிகர் விஜய் சேதுபதி நேற்று (அக்டோபர் 20) தன் ட்விட்டர் பக்கத்தில், “பேச்சு சுதந்திரம் இல்லாவிட்டால், இனி இந்தியாவை ஜனநாயக நாடு என்று அழைக்க வேண்டாம். இது மக்கள் தங்கள் குரலை உயர்த்துவதற்கான நேரம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவளித்துவருவதோடு மட்டுமல்லாமல் ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி பெரிய அளவில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*