By November 9, 20170 CommentsReport

விக்ராந்த் திரைவாழ்வில் திருப்புமுனை..!!

பாண்டிய நாடு திரைப்படம் போல், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ தனது திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும் என நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

கவண், தொண்டன் படங்களுக்குப் பிறகு நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த். சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகனாக விக்ராந்த் நடித்துள்ளார். நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய விக்ராந்த், “சுசீந்திரன் சாரின் ‘பாண்டிய நாடு’ படத்துக்குப் பிறகு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் எனக்கு நடிக்க கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்பு. சந்தீப், சூரி அண்ணன், ஹரீஷ் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடித்ததில் மிகுந்த சந்தோஷம். நெஞ்சில் துணிவிருந்தால் சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாகக் கொண்ட படம்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் குறித்து பேசும்போது, “பாண்டிய நாடு எனக்கு சினிமாவில் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல், அனைவருக்கும் இந்தப் படத்தில் அழுத்தமான, உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாபாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர். சுசீந்திரன் சார் என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் எனது சகோதரர் போல், அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். சொல்லப்போனால் அவர்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் நான் நடிக்க தயார். ஒரு குழுவாக இல்லாமல் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து பணியாற்றிய படம் இது. அதன் வெளிப்பாடு திரையில் தெரியும். பாண்டிய நாடு படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதே போன்று நடிப்புத் திறமையை தொடர வேண்டும் என்று சொன்னார். மேலும், இன்னும் சில இயக்குநர்களும் பாராட்டினார்கள். நிச்சயம் எனது சினிமா கரியரில் பாண்டிய நாடு போல் நெஞ்சில் துணிவிருந்தால் படமும் திருப்பு முனையாக அமையும்” என்று விக்ராந்த் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*