By November 9, 20170 CommentsReport

திகில் பட பயம்: ஆண்ட்ரியா..!!

தமிழ் ரசிகர்களை மிரட்டி எடுக்கும் பேயாக அவள் படத்தில் நடித்த ஆண்ட்ரியா, தனக்கு திகில் படங்கள் பார்க்க பயம் என்றும் தான் நடித்துள்ள பேய்ப் படங்களையே பொதுவாகப் பார்ப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழில் அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், அவள் எனத் தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார் ஆண்ட்ரியா. அவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள அவள் திரைப்படம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “2017 எனக்கு ஒரு வித்தியாசமான ஆண்டு, தற்போது வெளியாகியுள்ள அவள் படம் உண்மையில் ஒரு பயங்கரமான திகில் படம். பொதுவாக திகில் படம் என்றாலே எனக்கு பயம். அதனால் நான் நடித்துள்ள பேய்ப் படங்களையே பொதுவாகப் பார்ப்பது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அரண்மனை படத்தில் ஏற்கனவே பேய் கேரக்டரில் நடித்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, “ஆமாம், ஆனால் அது ஒரு திகில் நகைச்சுவை திரைப்படம். சுந்தர்.சி உண்மையில் எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர். பார்வையாளர்களுக்கு என்ன தர வேண்டும் என்று அவருக்குத் துல்லியமாகத் தெரியும். ஏராளமான குழந்தைகள் அரண்மனை படத்தை நேசித்தார்கள், ஆனால் அவள் அப்படியல்ல, இதை அரண்மனையோடு ஒப்பிடுவது தவறு” என்று கூறினார்.

இரு மொழிகளில் அவள் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தி மொழியில் அவள் வெளியானால் பாலிவுட் சென்றுவிடலாம் என்று நினைத்ததுண்டா என்ற கேள்விக்கு “நான் மும்பைக்கு சென்று ஒரு படத்தைப் பெற முயற்சித்ததில்லை. நான் பாலிவுட்டிற்குச் சென்றுதான் என்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அது எனக்கு அவமானமே” என்று கூறிய ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2 பற்றிப் பேச மறுத்துவிட்டார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*