By November 9, 20170 CommentsReport

நயன்தாரா கொடுத்த சினிமா வாய்ப்பு…!!

‘நயன்தாரா எனக்குக் கொடுத்த நம்பிக்கைதான் அறம் படம் உருவாகக் காரணம்’ என்று படத்தின் இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவம்பர் 10ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 6) மாலை சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய கோபி நயினார், “நான் இந்தப் படத்தின் கதையை முதலில் சிலரிடம் கூறும்போது, இது ஆவணப்படம் போன்று இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். அதன் பின்னர் சௌந்தர் என்பவர் மூலம் நயன்தாரா அவர்களுக்கு இந்தக் கதையை கூறும் வாய்ப்பு கிடைத்தது. கதையைக் கேட்டதும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதோடு, படத்துக்கான முன்பணத்தையும் வழங்கினார். நான் சினிமாவுக்குள் வந்துவிடக் கூடாது என்று சிலர் எனக்கு எதிராக செயல்பட்டுவந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தியவர் நயன்தாரா” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “இப்போது தமிழகத்தில் நிலவும் சூழலில் படத்தில் இடம்பெற்றுள்ள சில சமூக அக்கறையுள்ள வசனங்களை வெளிப்படையாகப் பேசினாலே சிலர் என்னை எதிர்க்கக்கூடும். அதையும் கடந்து மக்கள் மற்றும் ஊடகங்கள் மீதுள்ள நம்பிக்கையில் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இந்தப் படம் வெற்றி பெற்று நான் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று என்னைவிடவும் நயன்தாரா ஆசைப்படுகிறார். அந்த அளவுக்கு என்மீது நம்பிக்கை வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*