By December 15, 20170 CommentsReport

பதிலடி கொடுத்த பார்வதி..!!

நடிகர் மம்முட்டி பெண்களை இழிவுபடுத்தும் விதமாகச் சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுப் பேசியது வருத்தமளிக்கிறது என நடிகை பார்வதி தெரிவித்திருந்த கருத்துக்கு, மம்முட்டியின் ரசிகர்கள் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். பலர், பார்வதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பார்வதி அவர்களுக்குத் தற்போது பதிலடி தந்துள்ளார்.

மலையாள நடிகையான பார்வதி தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் உடைய பார்வதி அதற்குப் பிறகு என்னதான் பிரச்சினை வந்தாலும் அதனைத் தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர். இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பார்வதி மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த கசாபா படத்தில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகச் சில வார்த்தைகளைப் பேசியது வருத்தமளித்ததாகக் கூறியிருந்தார்.

இதற்கு மம்முட்டியின் ரசிகர்கள் பார்வதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் சினிமாவிற்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பேச வேண்டாம் எனக் கூறிக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது குறித்துச் சற்றும் கவலைப்படாத பார்வதி இப்படிக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று (டிசம்பர் 13) தன் ட்விட்டர் பக்கத்தில், “வழக்கம்போல நான் சொன்ன விஷயத்தை அதன் பின்னணியைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ளுங்கள். நீ ஒரு “சாதாரண நடிகை” என்று எனக்கு நினவுபடுத்துங்கள். எனக்குச் சாபம் கொடுங்கள். – இப்படிக்கு, உங்களைக் கோபப்படுத்தும் பெண்ணியவாதி” என்று நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகை பொது விஷயங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது, அதிலும் பெரிய நடிகர்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும்போது, அந்த நடிகையின் சொற்களின் மெய்ப்பொருளைப் பார்க்காமல் அவர் மீது தாக்குதல் தொடுப்பதும், அவருக்கே அறிவுரை வழங்குவதும் ரசிகர்களின் பொதுவான போக்கு. அதைச் சுட்டிக்காட்டிக் கூர்மையாகக் கிண்டலத்துள்ள பார்வதி, தனது சிந்தனையின் செறிவையும் அறிவுக்கூர்மையையும் துணிச்சலையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*