விரட்டும் பலூன்..!!
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் மிரட்டும் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
ஹாரர், த்ரில்லர் பாணியிலான படங்களில் பெண் பாத்திரமோ, ஆண் பாத்திரமோ பேயாக மாறிப் பயமுறுத்திவந்த நிலையில் ஜெய் நடித்து வெளிவரவுள்ள பலூன் படத்தில் பலூனே கதாபாத்திரங்களை பயமுறுத்துகிறது. பூர்வஜென்மத்தில் ஜெய், ஜனனி ஐயர் மற்றும் ஜெய்யின் மகள் போல இருக்கும் சிறுமியும் ரவுடிகளால் கொலை செய்யப்பட, மற்றொரு ஜென்மத்தில் ஜெய், அஞ்சலி மற்றும் ஜெய்யின் அண்ணன் மகன் ஆகியோர் மூலம் அந்த ரவுடிகளை பழிவாங்குவது போல் இந்தப் படம் இருக்குமென ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது.
ஜெய், ஜனனி ஐயர் காதலில் பலூன் முக்கிய இடம்பெறுகிறது. எனவே, அந்த பலூன் மூலம் பழிவாங்கும் விதமாக இயக்குநர் சினிஷ் திரைக்கதை அமைத்திருப்பார் என யூகிக்க முடிகிறது. பலூன் படத்தின் கதாபாத்திரங்களை விரட்டுவதோடு ரசிகர்களையும் மிரட்டும் என ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது. வெளிவந்துள்ள ட்ரெய்லர் படத்துக்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ‘70 MM என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இதை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார். வருகிற டிசம்பர் 29ஆம் தேதி வெளிவரவுள்ள பலூன் அனைவரையும் மி(வி)ரட்ட வருகிறது.