By December 20, 20170 CommentsReport

அருந்ததியை மிஞ்சுமா பாகமதி?..!!

பாகுபலி படத்திற்குப் பிறகு அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாகமதி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அருந்ததிக்கு முன்பே தமிழில் சில படங்களில் அனுஷ்கா நடித்திருந்தாலும் அருந்ததி திரைப்படம்தான் தமிழ் ரசிகர்களிடையே அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தற்போது அதே ஹாரர் த்ரில்லர் பாணியிலான பாகமதி படத்தில் நடித்திருக்கிறார். அனுஷ்காவின் பிறந்தநாளன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருப்பது போல இந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. டீசரின் முடிவில் அனுஷ்கா தன்னைத் தானே ஆணியால் அறைந்து வருத்திக்கொள்ளும் காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை ஜி.அசோக் இயக்கிவருகிறார். முக்கிய வேடங்களில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துவரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துவருகின்றன. ‘பாகுபலி’ படத்தைப் போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகளோடு உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.


Post a Comment