பத்மாவதி: பேராசிரியர்களுக்கு அழைப்பு..!!
சர்ச்சைக்குள்ளாகிவரும் பத்மாவதி திரைப்படத்தைப் பார்த்து கருத்துகளைத் தெரிவிப்பதற்காக, ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்களை, மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் அழைத்துள்ளது.
190 கோடி ரூபாய் செலவில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படம் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்வுடன் தொடர்புடையதாகும். ராஜபுத்திர வம்ச மக்களை இழிவுபடுத்தும் விதமாக பத்மாவதி திரைப்படக் காட்சிகள் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பல்வேறு மாநிலங்களில் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, படத்தின் வரலாற்றுத் தகவல்களை ஆய்வு செய்ய முன்னாள் அரச குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத் தகவல்களைப் படம் திரித்துள்ளதா என்று இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது.
ராஜஸ்தானில் உள்ள இரண்டு கல்லூரிகளின் பேராசிரியர்களான கான்கரோத், பி.எல்.குப்தா ஆகியோருக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இவர்கள் இருவரும் அடுத்த வாரம் பத்மாவதி திரைப்படத்தை அதிகாரிகளுடன் சேர்ந்து பார்க்கவுள்ளனர்.