By December 31, 20170 CommentsReport

தெலுங்கில் தடம் பதிக்கும் ஷ்ரத்தா..!!

தமிழ், கன்னடம், மலையாளத் திரையுலகில் வலம் வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தெலுங்கிலும் அழுத்தமான தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த ஷ்ரத்தா மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். கன்னடத்தில் இவர் நடித்த யூ-டர்ன் திரைப்படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தென்னிந்தியத் திரையுலகில் தெலுங்கில் மட்டும் அறிமுகமாகாமல் இருந்த இவர் தற்போது அங்கு கைவசம் மூன்று படங்களை வைத்துள்ளார்.

ரவிகாந்த் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் வெளிவருவதற்கு முன்னரே மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீராம் இயக்கத்தில் ரமேஷ் வர்மா தயாரிக்கும் ‘நின்னு வாடிலி நேனு பொலினுலே’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யூ-டர்ன், விக்ரம் வேதா போன்ற படங்களில் இவரது நடிப்பை பார்த்து ஸ்ரீராம் அணுகியுள்ளார். ஸ்கிரிப்ட், கதாபாத்திர உருவாக்கம் ஷ்ரதாவுக்கு மிகவும் பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் ஹேவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஷ்ரத்தாவுக்கு இல்லத்தரசி வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில், “இந்த கதாபாத்திரத்தில் முதன்முறையாக ஷ்ரதா நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மற்றொருபுறம் ரானா டகுபாட்டி நடிப்பில் இருமொழிகளில் தயாராக உள்ள படத்திலும் ஷ்ரதாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்த படத்தை பாலா இயக்குகிறார்.


Post a Comment