By January 24, 20180 CommentsReport

ஷாருக் கானுக்குக் கிடைத்த கௌரவம்..!!

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக் கானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது .

உலகப் பொருளாதார மாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று (ஜனவரி 23ஆம் தேதி) பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். பிரதமருடன் அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், எம்.ஜே.அக்பர், ஜிதேந்திர சிங் ஆகிய ஆறு மத்திய அமைச்சர்களும், தேவேந்திர பத்னாவிஸ், சந்திரபாபு நாயுடு ஆகிய இரண்டு முதலமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிரதமருடன் செல்லும் 100 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவில் நடிகர் ஷாருக் கான் இடம்பெற்றுள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு, சுற்றுச்சூழல், உலகளாவிய பொருளாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த மாநாட்டில் 40 அமர்வுகளில் 70 நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். மாநாட்டின் இறுதி நாளான 26ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டின் இடையே டிரம்ப்புடன் மோடி பேச்சு நடத்தவும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று (ஜனவரி 22) நடந்த விழாவில் ஷாருக் கானுக்கு மனிதாபிமானப் பணிகளுக்‍காக கிறிஸ்டல் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. அப்போது டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக் கான், சினிமாவில் தமது மிகச் சிறிய பங்களிப்புக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாகத் தெரிவித்த ஷாருக்கான், இந்தியா உலக அரங்கில் பொருளாதார ரீதியாக மிகுந்த பலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவருடன், ஹாலிவுட் நடிகை கேட் ப்ளான்செட், இசைக் கலைஞர் எல்டன் ஜான் ஆகியோரும் கிறிஸ்டல் விருது வழங்கி கவுரவிக்‍கப்பட்டனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*