By January 26, 20180 CommentsReport

வித்தியாசத்தை விரும்பும் அனுஷ்கா..!!

தான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமன்றி, படங்களில் அணியும் உடைகள், அணிகலன்களில்கூட வித்தியாசமானவற்றையே தேர்வு செய்வதாகக் கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

ஹாரர் த்ரில்லர் வகையில் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘பாகமதி’. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தை ஜி.அசோக் இயக்கிவருகிறார். முக்கிய வேடங்களில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இதற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யுவி கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் பாகமதி படம் நாளை (ஜனவரி 26) வெளிவரவிருக்கிறது. இந்த நிலையில் ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அனுஷ்கா, “பாகமதி படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. எனக்கு ஒரு கதையின் கான்செப்ட் பிடித்தால் போதும். அது காதலோ, ஃபேன்டஸியோ, வரலாற்றுப் பின்னணியோ. எதுவாக இருந்தாலும் தயங்காமல் ஒப்புக்கொள்வேன். அப்படித்தான் அருந்ததி, பஞ்சமுகி, பாகுபலி, பாகமதி படங்களில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “கமர்ஷியல் களமாக இருந்தாலும்கூட, அதில் மையக் கரு நேர்த்தியாக இருந்தால் போதும். அதுதான் வெற்றியைக் கொடுக்கும் என்பது என் கருத்து. தவிர, ஒவ்வொரு படக் கதாபாத்திரத்துக்காகவும் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள், மேக்கப் ஆகியவற்றையே தேர்வு செய்கிறேன். ஆனால், ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் ‘அருந்ததி மாதிரி இருக்கே?’ என்பார்கள். அந்த அளவுக்கு ‘அருந்ததி’ கதாபாத்திரம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறதே என்று மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மையில் அடுத்தடுத்து வந்த பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களுக்கு வெவ்வேறு பின்னணியிலேயே உடைகள், நகைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இப்போது வரும் ‘பாகமதி’ படத்திலும் அந்த வித்தியாசத்தை நன்கு உணரமுடியும். ஏனென்றால் நான் வித்தியாசத்தை விரும்புபவள். ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் விரும்புவார்கள்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*