By January 27, 20180 CommentsReport

மும்மூர்த்திகள் இசையில் விஜய் சேதுபதி..!!

தமிழில் பிஸியாகப் பல படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இசையமைக்கின்றனர்.

தமிழ் சினிமாவுலகில் ஒருசில கேரக்டர்களில் மட்டுமே முகத்தைக் காட்டிவந்த விஜய் சேதுபதியைத் தன்னுடைய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் முழுமையான ஹீரோவாக அடையாளப்படுத்தியவர் சீனு ராமசாமி. மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சீனு ராமசாமி உருவாக்கிய தர்மதுரை படமும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைவதாகத் தெரிகிறது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு படத்தைத் தயாரிக்கவிருப்பதாகவும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பார் என்றும் சீனு ராமசாமி இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் அடுத்த படத்தில் எனது அப்பா இளையராஜா, அண்ணன் கார்த்திக்ராஜா ஆகியோரோடு முதன்முறையாக இணைந்து இசையமைக்க இருக்கிறேன். மாமனிதன் என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு விஜய் சேதுபதி நாயகன். சீனு ராமசாமி இயக்குநர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் தனது முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்திருந்தார் இளையராஜா. அதன் பிறகு, இப்போது தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து இசையமைக்கவுள்ளார்.

ஆக, மும்மூர்த்திகள் இசையமைப்பில் உருவாகப்போகிறது விஜய் சேதுபதி திரைப்படம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*