By February 2, 20180 CommentsReport

அமலா பால்: தனியே நிற்கவைத்த தமிழ் சினிமா..!!

நடிகை அமலா பால் கொடுத்த புகாரின்பேரில், அழகேசன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியத் திரையுலகத்துக்கே தலைகுனிவானதும், ஒரு நடிகையை எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதற்கும் இந்தச் சம்பவம் சின்ன உதாரணம்.

கொட்டிவாக்கத்திலுள்ள நடனப் பள்ளியில் மலேசியாவில் நடைபெறும் பெண்கள் விழாவுக்காக நடனப் பயிற்சி செய்திருக்கிறார் அமலா பால். அந்தச் சமயத்தில் அழகேசன் என்பவர், அமலாவை அணுகி, மலேசியாவில் இருக்கும் அவரது நண்பருடன் இணக்கமாகப் போகும்படி வலியுறுத்தியிருக்கிறார். பாலியல் ரீதியாக விலை பேசுவதுபோல அவரது பேச்சு இருந்ததாகக் காவல் நிலையத்துக்கு வந்தபோது அமலா பால் குறிப்பிட்டிருந்தார். மேலும், விழா ஏற்பாட்டினருக்கு மட்டுமே தெரியும் அமலா பாலின் நடனப் பயிற்சி நேரத்தை சரியாகத் தெரிந்துகொண்டு அந்த நபர் வந்திருப்பதால், இதில் அழகேசனையும் தாண்டி பலரது தொடர்பு இருக்கக் கூடுமென்று கருதுவதாகவும் அமலா பால் குறிப்பிட்டிருக்கிறார்.

மலேசியாவில் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் Dazzling Tamizhachi நிகழ்ச்சியை நடத்துபவர்கள் Malik Streams Corporations எனும் திரைப்பட நிறுவனம். திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த நிறுவனம் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றன. அப்படித்தான் இந்த Dazzling Tamizhachi நிகழ்ச்சி முழுவதும் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு விழாவாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவின் ஏற்பாடுகளை Malik Streams Corporations பார்த்துக்கொள்ள, சென்னையிலிருந்து வரும் திரைக்கலைஞர்களைப் பார்த்துக்கொள்வதும், அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தரவும், சென்னையைச் சேர்ந்த Benchmark Events எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அமலா பால் திட்டவட்டமாக நிகழ்ச்சிக்குத் தொடர்புடையவர்கள் யாரோ தான் இதற்கு உதவியிருக்க வேண்டும் என்று சொல்வதன்மூலம் இந்த இரு நிறுவனங்கள் மட்டுமே சந்தேக வலைக்குள் சிக்குகின்றன. ஒரு நடிகையை அணுகி, தகாத முறையில் பேசுவதற்கான தைரியத்தை அழகேசனுக்கு யார் கொடுத்தது என்ற விசாரணையைக் காவல் துறையினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

சக நடிகை பாதிக்கப்பட்டிருப்பதற்குத் தமிழ்த் திரையுலகமும் சரி, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும் எந்தவோர் அமைப்பும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த ஒருவர் கொடுத்திருக்கும் இப்படிப்பட்ட புகாருக்கு, அவருடன் இணைந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த எந்த நடிகையும்கூட இதுவரையிலும் இதுபற்றி வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*