By February 3, 20180 CommentsReport

ரகுல் படத்தைக் கைப்பற்றிய பூஜா..!!

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 25ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மகேஷ் பாபு பெரிதும் எதிர்பார்த்த ஸ்பைடர் திரைப்படம் ஏமாற்றத்தையே தந்தது. இருப்பினும் அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் நடித்திருக்கிறார். மகேஷ் பாபுவின் 24ஆவது படமான இது ஏப்ரல் 27ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதனையடுத்து மகேஷ் பாபுவின் 25ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்திற்கு பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `ஊப்பிரி’ திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. தமிழில் `தோழா’ என்ற பெயரிலும் வெளியாகி இது வரவேற்பைப் பெற்றது. இவர் மகேஷ் பாபுவின் 25ஆவது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முன்பு செய்தி வெளியானது. தற்போது பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்துவருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த `துவ்வடா ஜெகன்னாதம்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*