By February 9, 20180 CommentsReport

ரஜினியுடன் கூட்டணி? கமல் விளக்கம்..!!

நடிகர்கள் ரஜினியும் கமலும் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், ரஜினியுடன் கூட்டணி சேர்வது சாத்தியமா என்பது குறித்து கமல் விளக்கமளித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பைக் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்து கட்சி தொடங்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். அவரது கட்சிக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவருகின்றனர். பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாக நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார். முதல் கட்டமாக மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்பதற்குக் கமல் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் தொடரில் விளக்கமளித்துள்ளார். “நீங்களும் ரஜினியும் கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – எங்கள் இருவரையும் சேர்த்தே துரத்துகிறது இந்தக் கேள்வி. இதற்கு ரஜினி சார், ‘காலம் பதில் சொல்லும்’ என்று சொல்லியிருந்தார். ‘அதையே வழிமொழிகிறேன்’ என்று நான் சொன்னேன். உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். நான் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவரும் கட்சியை அறிவிக்க வேண்டும். இருவரும் கொள்கை விளக்கங்கள் சொல்ல வேண்டும். அது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அதனால், இது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. தவிர, அது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்” என்று விளக்கமளித்துள்ளார்.

கறை படியாத கரங்களைச் சேர்த்துக்கொள்வோம்

பிற கட்சிகளில் இருந்து தனது கட்சியில் சேர்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், “நாங்கள் புதுச் சமையல் பண்ணிக்கொண்டிருக்கும்போது கறை படிந்த அந்தக் கைகளையும் கொண்டுவந்து பாத்திரத்தில் ஒட்டிவிட்டுப் போய்விடுவார்களோ என்ற தயக்கமும் எங்களுக்குண்டு. அப்படிக் கறை படிந்த கைகள் யாருடையவை என்று பார்க்க வேண்டும். அதற்காக, ஒரு கட்சியில் எல்லோருமே அப்படி இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வந்தால் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு முதலாளித்துவ மனப்பான்மையில் செயல்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் 7 நாள் சம்பளத்தைப் பிடித்தது அதிகப்படியான தண்டனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*