தமிழர் பெருமை பேசும் படத்தில் அக்ஷய்குமார்..!!
அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம்கபூர் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்தி படம் ‘பேட் மேன்’. பால்கி இயக்கியுள்ள இது நேற்று ரிலீஸ் ஆனது.
இது ஒரு தமிழரின் பெருமை பேசும் படம். பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் அருணாசலம் முருகானந்தம். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவருடைய வாழ்க்கை ‘பேட்மேன்’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. இதில் அருணாசலம் முருகானந்தம் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். முக்கிய தோற்றத்தில் ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்திருக்கிறார்கள்.
பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரிப்பதற்கு அவர் எந்தவிதமான சிரமங்களை, அவமானத்தை கடந்து வெற்றி பெற்றார் என்பது கதை. லாப நோக்கம் இல்லாமல் மகளிர் அமைப்புகள், பள்ளிகள், பொது நல அமைப்புகளுக்கு எந்திரம் மூலம் ‘நாப்கின்’ தயாரிக்கும் பயிற்சியையும் அருணாசலம் முருகானந்தம் அளித்து வருகிறார். சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக இவரை 2014-ம் ஆண்டு ‘டைம்’ பத்திரிகை தேர்ந்து எடுத்தது. மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது.
இந்த படம் மூலம் பெண்கள் மிகவும் பயன் பெறுவார்கள். பெண்களிடம் இது வரவேற்பை பெறும் என்று இந்தி பட உலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழரின் பெருமை பேசும் இந்த படம் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.