By February 12, 20180 CommentsReport

ரஜினியுடன் இணைய வாய்ப்பில்லை..!!

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘எனது நோக்கமும், ரஜினி நோக்கமும் ஒன்றாக இருந்தாலும் அரசியல் பாதை என்பது வேறு’ என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் விரைவில் புதுக்கட்சி தொடங்கவுள்ள நிலையில், வரும் 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் தன்னுடைய மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 11) அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார்.

மேடைக்கு வேட்டி, சட்டையுடன் வந்த கமல் வணக்கம் கூறித் தனது ஆங்கில உரையைத் தமிழில் ஆரம்பித்தார். “கடந்த 37 வருடங்களாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் அரசியல் சேவை செய்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் பயணத்தைத் தொடங்கும் நான், மாற்றத்தை மக்களிடமிருந்து தொடங்க விரும்புகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை முன்னோடி கிராமமாக மாற்றப் போகிறேன். இதில் மக்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். மக்களிடம் நான் பணத்துக்காகக் கையேந்தவில்லை. நல்ல கருத்துக்காக கையேந்துகிறேன். தேர்தலில் வாக்களிக்க பணம் பெற்றால், அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற பிறகு பணத்தை எடுப்பதைக் கேட்க முடியாது. நான் வித்தியாசமானவன் எனக் கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

மேலும் அவர், “நானும் ரஜினியும் நண்பர்கள்தான். எங்களுடைய பொது நோக்கம் ஒன்று என்ற போதிலும், இருவரின் பாதைகளும் தனித்தனியானவை. ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவி இல்லை என நினைக்கிறேன். என்னுடைய அரசியல் நிறம் காவியல்ல, எனது அரசியல் கொள்கையின் நிறம் கறுப்பு” என்று கூறிய கமல்ஹாசன் தனது உரையை ‘நாளை நமதே’ என்று கூறி முடித்தார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*