By February 12, 20180 CommentsReport

இளம் நடிகர்கள் கஷ்டப்படுவதில்லை: அமிதாப்..!!

‘நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எனது நடிப்புப் பயணத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார் .

பாலிவுட் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இந்திய சினிமாவுலகில் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நடிகராக தக்கவைத்து வருகிறார் அமிதாப். இந்த நிலையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

“சினிமா ஒரு மாய உலகமாகும். இங்கு நடிக்க வரும் நடிகரோ, நடிகையோ ஏதேனும் ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் முதலில் நினைப்பார்கள். அதன்பிறகு வெற்றிப் படங்களில் தாங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பிறகு ரசிகர்கள் கூட்டம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவையெல்லாம் கிடைத்த பிறகு தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேடுவார்கள். வயது அதிகமாகும்போது உண்மை பேசும் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனக்கு இப்போது 75 வயது ஆகிறது. இனிமேல் சமூகத்துக்குத் தேவையான நல்ல விஷயங்களைச் சொல்லும் படங்களில் நடிப்பேன். இப்படி பல ஆசைகள் நடிகர்களுக்குள் ஒளிந்து கிடக்கிறது” என்று தன் அனுபவங்களைக் கூறியுள்ளார்.

“நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எனது நடிப்பு பயணத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது உள்ள இளம் நடிகர்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகர்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது. வீட்டில் இருக்கும்போதும் வெளியே போகும்போதும் நடிப்பு பற்றியே யோசிப்போம். பயிற்சிகளும் எடுப்போம். ஆனால் இன்றுள்ள இளம் நடிகர்கள் கஷ்டப்படுவது இல்லை. எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் எளிதாக நடித்து விடுகிறார்கள். அவர்கள் திறமைகளை பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். மக்களுக்குக் கருத்து சொல்லும் படங்களில் நடிப்பதுதான் எனக்கு இப்போது பிடிக்கிறது” என்று தன் எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*