By February 15, 20180 CommentsReport

பாலிவுட் செல்லும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!!

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து கவனம்பெற்ற நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாலிவுட் திரையுலகிலும் கவனம் பெறும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்.

மலையாள சினிமாவுலகில் கோகினூர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷ்ரத்தா, கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற யு டர்ன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் பல படங்களில் நடித்தாலும் மாதவனுக்கு ஜோடியாக நடித்த விக்ரம் வேதா திரைப்படம் அவரை நன்கு அடையாளப்படுத்தியது. தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்துவந்த ஷ்ரத்தா முதன்முறையாக பாலிவுட் சினிமாவுலகில் காலடிவைக்கிறார்.

இது குறித்து பிஹைண்ட் வுட்ஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மிலன் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறேன். இந்தப் படத்தை திக்மன்சு துலியா என்பவர் இயக்குகிறார். உத்தரப் பிரதேசத்தைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகவுள்ள நகைச்சுவை கலந்த காதல் கதை இந்தப் படமாகும். திக்மன்சு இதற்கு முன்பு அனுராக் காஷ்யப்பின் படத்தில் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் தேர்வானது எப்படி என்று விளக்கிய அவர், “நான் இரண்டு காட்சிகளுக்கு நடித்து அதனை வீடியோவாக படக் குழுவினருக்கு அனுப்பிவைத்தேன். அதனைப் பார்த்த படக் குழுவினர் என்னை கதாநாயகியாகத் தேர்வு செய்துள்ளனர். பாலிவுட்டில் நான் நடிக்கும் முதல் படமென்பதால் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்தும் தொடர்ந்து கதைகேட்டுவருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*