By February 16, 20180 CommentsReport

அஜித் – இமான்: கூட்டணி உறுதி..!!

அஜித்தின் விஸ்வாசம் படத்துக்குத் தான் இசையமைக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார் இமான்.

அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கு ஹீரோயின் தேர்வு கூட எளிதாக முடிந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்துக்கு யார் இசையமைக்கப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. காரணம் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், சாம் சி.எஸ் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்படுவதும் பின்னர் நிராகரிக்கப்படுவதுமாக இருந்தது. ஒருகட்டத்தில் விஸ்வாசத்துக்கு யார்தான் இசையமைக்கவிருக்கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள் என்று கடுப்பாகும் நிலைக்கு ரசிகர்கள் சென்றார்கள். அப்போது இமானின் நூறாவது படமான டிக் டிக் டிக் படத்தின் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் விஸ்வாசம் படத்துக்கு இமான் இசையமைக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனாலும் ரசிகர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கியே இருந்தார்கள்.

இந்த நிலையில் காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14) இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் படத்துக்குத் தான் இசையமைக்கவிருப்பதாக ட்விட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அதில், “பல வருடங்களாக நான், நீங்கள் எப்போது அஜித் படத்துக்கு இசையமைக்கப் போகிறீர்கள் என்கிற கேள்வியை எதிர்கொண்டு வந்தோம். அதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது. ஆமாம் நண்பர்களே! விஸ்வாசம் படத்துக்கு நான் இசையமைக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவா சாருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும், கடவுளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

நூறு படங்களுக்கு மேலாக இசையமைத்துவரும் இமான், விஜய் உள்பட தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ஆனால் அஜித்தின் படத்துக்கு மட்டும் இதுவரை இசையமைத்ததில்லை. அந்தக் கனவு இமானுக்கு விஸ்வாசம் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*