மே மாதத்தில் விஸ்வரூபம் 2?..!!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வரூபம் 2 திரைப்படம் மே மாதத்தில் வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் கமல் மற்றொரு பக்கம் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முனைப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்திற்கான காட்சிகள் அதிகப்படியாக இருந்ததால் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்திக்கொள்ள அது ஏதுவாக அமைந்தது. பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்குமிடையே வந்ததால் முதல் பாகம் வெற்றியடைந்தது. இதனால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால் இரண்டாம் பாகம் தயாராக கிட்டத்தட்ட 5 வருடங்களாகியிருக்கின்றன.
விஸ்வரூபம் படத்தின் ஒலிவடிவமைப்புப் பணிகளும் கமல் சம்பந்தமான டப்பிங் பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை வெளியிடுவதற்கான முனைப்பில் இறங்கியுள்ளார். இன்று கமலின் அலுவலகத்திற்குச் சென்ற அவர், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது பற்றிப் பேசியிருக்கிறார். ஆகையால் எந்த நேரமும் விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படலாம் எனத் திரைத் துறை வட்டாரங்களில் பேசப்பட்டுவருகின்றன.
ரஜினியின் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவிருப்பதால், மே மாதத்தில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.