By February 18, 20180 CommentsReport

சிவகார்த்தியைக் குஷிப்படுத்திய படக் குழு..!!

சீமராஜா படப்பிடிப்புத் தளத்தில் படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளர்ச்சிகண்டுவருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய அபரிமிதமான வளர்ச்சி சினிமாத் துறைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. தனது 33ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சிவகார்த்திக்குப் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். சிவகார்த்தி தனது பிறந்தநாளைத் தற்போது நடித்துவரும் சீமராஜா படக்குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் பொன்ராமுடன் மூன்றாவது முறையாக இணைந்து சீமராஜா படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. சிவகார்த்தியின் பிறந்தநாள் ட்ரீட்டாக படக் குழுவினர் நள்ளிரவு 12 மணியளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

இந்த நிலையில் சிவகார்த்தி தனது பிறந்தநாளை படக்குழுவினரோடு கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்தக் கொண்டாட்டத்தில் இயக்குநர் பொன்ராம், நடிகர்கள் சூரி, நெப்போலியன், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பணியாற்றி, நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாகப் பேசி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன் அதே பாணியை சினிமாவிலும் கடைப்பிடித்து வெற்றிகண்டுவருகிறார். இந்த அளவிற்கு அவர் உயரத்தை அடைந்ததற்குக் காரணம் அவரின் கடின உழைப்பும் திறமையும் நம்பிக்கையும்தான். இது அவருடைய அதிர்ஷ்டம் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது.


Post a Comment

CAPTCHA
Refresh

*