By February 19, 20180 CommentsReport

தனுஷுடன் இணையும் சசிகுமார்?..!!

தனுஷ் படத்தில் இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் அடுத்தடுத்துப் பல படங்களில் நடித்துவந்தாலும் அவரது நடிப்பில் நீண்ட நாள்களாக உருவாகிவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

கௌதம் மேனன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் ப.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார்.

இதற்கிடையே கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை இயக்க ஆரம்பித்தார். தனுஷும் அடுத்ததாக வடசென்னை, ஒரு ஹாலிவுட் படம் என மீண்டும் பிஸியாகிவிட்டார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சுமார் 10 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது. வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்துவந்தார் தனுஷ். தற்போது மாரி-2 படத்தில் நடித்துவருகிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒருசில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தற்போது சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் சசிகுமார் சம்மதம் தெரிவித்தால் தனுஷ், சசிகுமார் இணையும் முதல்படமாக இது இருக்கும்.

படப்பிடிப்பு நிறைவுபெறவுள்ள நிலையில் இறுதிக்கட்டப் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தை மே மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*