நடிகையர் திலகத்தில் அனுஷ்கா?..!!
நடிகையர் திலகம் படத்தில் நடிகை பானுமதியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான நடிப்பினாலும், கண் அசைவினாலும் தனி முத்திரை பதித்தவர் நடிகை சாவித்ரி. அவரின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
அவரது கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சமந்தா, ஷாலினி பாண்டே, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்துக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.
இந்த நிலையில் சாவித்திரியின் கடைசி நாட்களில் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் பானுமதி. எனவே அவரது கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவை அணுகியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடிகையர் திலகம் படத்தில் நடிகை அனுஷ்கா பானுமதியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒப்பந்தமான அவர் இதில் நடித்து முடித்துவிட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்தான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.