By February 20, 20180 CommentsReport

பிரபலங்கள் பாராட்டும் நாச்சியார்..!!

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நாச்சியார் திரைப்படம் பிரபலங்களிடம் பாராட்டுக்களைப் பெற்றுவருகின்றது.

பாலாவின் திரையுலக வாழ்க்கையில் குறுகிய காலத்தில் குறுகிய கால அளவு கொண்டு எடுக்கப்பட்ட படமாக நாச்சியார் உருவாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இயக்குநர் பாலா மற்றும் இதில் நடித்த ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் ஆகியோர்களின் திறமைகளை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி ஆகியோரும் இந்த படத்தைப் பாராட்டியுள்ளனர்.

பாலாவை நேரில் சந்தித்து ‘நாச்சியார்’ வெற்றி பெற மலர்க்கொத்து அளித்து வாழ்த்துத் தெரிவித்தார் சிவகுமார். அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார் என ஜோதிகாவையும், முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழவைத்திருக்கிறார் என இளையராஜாவையும், கனமாகத் தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்திருக்கிறார் என பாலாவையும் பாராட்டியிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து நாச்சியார் படத்தைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள்; பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில் இயங்க வேண்டும் சகோதரி. தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது; பாராட்டுகிறேன். ஒளிப்பதிவு செய்த ஈஸ்வர்! வெள்ளைக்காரக் கண்களோடு பிறந்த தமிழனப்பா நீ! படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாச்சியார் திரைப்படம் ஒரு தெளிவான மற்றும் கதை சொல்லலில் நேர்த்தியான பல சம்பவங்களைக் கொண்ட படமாகும். பாலா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பல சாதகமான கதாபாத்திரங்களையும் நேர்மையான முடிவுகளையும் காண முடிகிறது. அண்ணி (ஜோதிகா) மற்றும் ஜி.வியின் கதாபாத்திரங்கள் வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து அனுபவிக்க படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன” என்று பாராட்டியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*