By February 20, 20180 CommentsReport

விருதுகள் குவித்த த்ரி பில்போர்ட்ஸ்..!!

‘பாஃப்டா’ என அழைக்கப்படும் ‘பிரிட்டிஷ் ஃபிலிம் அகாடமி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி நேற்றிரவு (பிப்ரவரி 18) லண்டன் நகரில் நடைபெற்றது. இதில் த்ரி பில்போர்ட்ஸ் திரைப்படம் ஐந்து பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது.

மார்டின் மெக்டொனா இயக்கியுள்ள ‘த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங் மிசௌரி’ திரைப்படம் 75ஆவது கோல்டன் குளோப் விருதுகள் நிகழ்வில் நான்கு விருதுகளைப் பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள 90ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்காக 7 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாஃப்டா விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சிறந்த பிரிட்டிஷ் படம் பிரிவிலும் விருது பெற்றது. இப்படத்தில் நடித்த பிரான்சிஸ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சாம் ராக்வெல் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் மெக்டொனாவுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் ஐந்து விருதுகளை இப்படம் தட்டிச் சென்றுள்ளது.

திரையுலகில் நடைபெறும் பாலியல் கொடுமைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ‘மீ டூ’ (#Me Too), டைம்ஸ் அப் (Time’s Up) இயக்கங்கங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக பெரும்பாலான பிரபலங்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.

ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டமாக பாஃப்டா விருதுகளை ரசிகர்கள் கருதினாலும் கடந்த மூன்று வருடங்களாக சிறந்த படங்களுக்கான தேர்வில் இரு விருதுகளுக்கும் வித்தியாசம் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*