By February 21, 20180 CommentsReport

எங்களுக்குள் ஒற்றுமை அதிகம்: கீர்த்தி சுரேஷ்..!!

நடிகை சாவித்திரிக்கும் எனக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்று கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நாக் அஷ்வின் இயக்கத்தில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் – ஸ்வப்ன சினிமா நிறுவனங்கள் தயாரித்துவருகின்றன. இந்தப் படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார்.

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதே சமயம் அவ்வளவு பெரிய நடிகையைப் போன்று நடிப்பதில் பயமும் இருந்தது. சாவித்திரியின் மகளிடம் பேசினேன். அவர் தனது தாயின் நடை உடை பாவனைகளை எனக்குக் கற்றுத் தந்தார். இப்படத்தில் நடிக்கத் துவங்கியபோது மேக்கப் போட மட்டும் மூன்றரை மணிநேரம் ஆகும். அதன் பிறகு அத்தனை மணிநேரமாக மேக்கப் போடுவது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் நடித்ததில் எனக்குப் பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “எனக்கும் சாவித்திரிக்கும் இடையே நிறைய ஒற்றுமை இருப்பதைப் புரிந்துகொண்டேன். சாவித்திரி நன்றாக நீச்சல் அடிப்பார். அதேபோல், எனக்கும் நீச்சல் என்றால் ரொம்பப் பிடிக்கும். நாங்கள் இருவரும் தேநீர் பிரியர்கள். அவர் கிரிக்கெட் விளையாடுவார். நானும் பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அவருக்கு கார் ஓட்டப் பிடிக்குமாம், எனக்கும்தான். இப்படி எனக்கும் அவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன” என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.


Post a Comment

CAPTCHA
Refresh

*