By February 22, 20180 CommentsReport

பாரம்பரியத்தைச் சொல்லும் ‘தமிழனானேன்..!!

தமிழர் பாரம்பரியத்தையும் வீரக் கலைகளையும் தேடும் கதையாக உருவாகியுள்ளது தமிழனானேன் திரைப்படம்.

இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வந்தனா நடித்துள்ளார். சரவணன், பிரீத்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் போன்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர். விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரகு ராமையா இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சதீஷ் ராமகிருஷ்ணன் பேசும்போது, “ தமிழர்களின் தவறான மனப்போக்கால்தான் தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன; இதனை அன்றைய ஆதித் தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகியிருப்பான்; அதற்குத் தீர்வு காண எப்படி நடந்துகொண்டிருப்பான்? என்பதைப் பேசும் படமாக உருவாகியுள்ளது.இது தொலைந்துபோன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்துபோன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை. நம் ஆதிக் கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில்நுட்பங்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இப்படம் மூன்றுவித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண ஆக்‌ஷன் படம் போலத் தெரியும். இன்னொரு அடுக்கு ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவறவிட்டாலும் படம் புரியாமல்போய்விடும். மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரியவரும். அதே போல் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் யாருக்கும் டூப் போடப்படவில்லை. கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை. எல்லாமே அசல் காட்சிகள்தான்” என்று கூறியுள்ளார். இப்படம் இம்மாதம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*