By February 22, 20180 CommentsReport

பிரியா மீது நடவடிக்கை எடுக்கத் தடை..!!

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடலில் தன் கண் அசைவுகள், முக பாவனைகள் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

படத்தில் வரும் பாடல், இஸ்லாமியர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளதாக ஹைதராபாத்தில் சிலர் புகார் அளித்தனர். அதைப் போல இந்தப் பாடலுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலும் தெலங்கானாவிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, போலீசார் பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் ஒமர் லுலுவின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

ஆனால் அந்தப் பாடல், 40 ஆண்டுகளாக வடகேரளாவில் விசேஷங்களுக்குப் பாடப்படும் ஒன்றுதான் என்றும், திடீரென எங்கிருந்து சர்ச்சை வந்தது என்றும் இயக்குநர் ஒமர் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து பிரியாவும், இயக்குநர் ஒமரும் போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை வைத்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று (பிப்ரவரி 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரியா வாரியர் தரப்பிலிருந்து, “இந்தப் பாடல் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டதல்ல. என் பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது சம்பந்தமாக பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா, தெலங்கானா அரசுகளுக்கு இவ்வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*