By February 22, 20180 CommentsReport

சிம்புவுக்குப் பதிலாக மாதவன்..!!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக கௌதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிம்புவுக்குப் பதிலாக மாதவன் நடிக்கவிருக்கிறார்.

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. 2010ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எட்டு வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்துக்கான முயற்சியில் இறங்கியுள்ளார் கௌதம் மேனன். ஆனால், ‘விடிவி’ படத்தின் அடுத்த பாகமாக இல்லாமல், அதன் தொடர்ச்சியாக ‘ஒன்றாக’ என்கிற பெயரில் உருவாக்கவுள்ளார். இதில் நான்கு கதாநாயகர்கள் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது சம்பந்தமாக பரத்வாஜ் ரங்கனுடனான கலந்துரையாடலில் அந்தப் படம் குறித்த திட்டங்கள் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார் கௌதம். இந்தப் படத்தின் கதை குறித்தான கேள்விக்குப் பதிலளித்த அவர், “விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த கார்த்திக் கதாபாத்திரம், எட்டு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய கல்லூரி நண்பர்களைச் சந்திக்கிறார். அந்த நண்பர்களுடன் இணைந்து இன்னொரு நண்பரின் திருமணத்துக்குச் செல்வதாகக் கதை நகரும்” எனக் கூறினார்.

சிம்புவே மீண்டும் தொடர்கிறாரா எனக் கேட்கப்பட்டபோது, “இல்லை. எட்டு வருடத்துக்குப் பிறகான கார்த்திக் ரோலில் சிம்புவுக்குப் பதிலாக மாதவன் நடிக்க இருக்கிறார்” எனக் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.

நான்கு நடிகர்கள் நடிப்பதாக வெளிவந்த செய்திகளுக்குப் பதிலளித்த கௌதம், “தமிழிலிருந்து மாதவன், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், மலையாளத்திலிருந்து டொவினோ தாமஸ் என மொழிக்கு ஒருவராக நான்கு கதாபாத்திரங்களிலும் வெவ்வேறு மொழி நடிகர்கள் நடிக்கிறார்கள். தெலுங்கில் இருந்து யார் நடிப்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை” எனப் படம் குறித்தான சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*