By February 24, 20180 CommentsReport

ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு..!!

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா, ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, தான் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார். தனிக்கட்சி தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவிருப்பதாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கட்சி சம்பந்தமான பணிகளில் விரைவாக செயல்பட்டு வருகின்றனர்.

அரசியலில் தீவிரம் காட்டிவந்த அவர் ஒப்புக்கொண்ட படங்களைத் தவிர்த்து, தொடர்ந்து படங்களில் நடிப்பாரா இல்லையா என்கிற சந்தேகம் அவரது ரசிகர்களிடையே இருந்துவந்தது. இன்று (பிப்ரவரி 23 ) ரசிகர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்று தர வேண்டியதில்லை, அவர்கள் மற்றவர்களுக்கு அரசியல் கற்று தருவார்கள் என்று பெருமையாகக் கூறினார். இதையடுத்து அவரது புதிய பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகியுள்ளது.

ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜும் ரஜினியும் கபாலிக்கு முன்னதாகவே இணைவதாக இருந்தது. ஆனால் தற்போதுதான் அது சாத்தியமாகியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், எந்திரன் படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*