By February 24, 20180 CommentsReport

விவசாயி என்பதில் பெருமைப்படும் கார்த்தி..!!

தான் ஒரு விவசாயி என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் கதாபாத்திரத்தில் கார்த்தி வலம் வருகிறார் என்று கடைக்குட்டி சிங்கம் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி-பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் படம் கடைக்குட்டி சிங்கம். நடிகர் சூர்யா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக சாயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இதில் கார்த்திக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்தி இந்தப் படத்தில் விவசாயத்தால் சம்பாத்தியம் மேற்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமைப்படும் விதமாக தன்னுடைய பைக் நம்பர் பிளேட் முதற்கொண்டு விவசாயி எனப் பெயரிட்டிருக்கும் போஸ்டர்கள் வெளிவந்தன. இது குறித்து படக் குழுவினர் டெக்கான் க்ரானிக்கிலுக்கு அளித்த பேட்டியில், “என்ஜினியர், டாக்டர் படித்தவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்குப் பின் தாங்கள் செய்யும் வேலையை குறிப்பிட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ, அதேபோல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வலம் வருகிறார்” என்றுக் கூறியுள்ளனர்.

இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐடி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். அதே போல், கடைக்குட்டி சிங்கம் படத்தின் ரிலீஸுக்குப் பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்குப் படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாகப் பேசியுள்ளார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளன.

இதில் கார்த்தியின் மூத்த சகோதரிகளாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு (சின்ன பாபு) என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*