By February 24, 20180 CommentsReport

மன உளைச்சலுக்கு ஆளானேன்: தீபிகா..!!

அனைத்து அலுவலகங்களிலும் மனநல மருத்துவரையோ அல்லது மன அழுத்தம் தொடர்பான ஆலோசகரையோ நியமிப்பது அவசியம் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்துவருகிறார். இந்த நிலையில் இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்ற ‘வேர்ல்டு காங்கிரஸ் ஆன் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’ கருத்தரங்கில் பங்கேற்றார்.

கருத்தரங்கில் பேசிய தீபிகா, “நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டவள். துக்கத்திற்கும், மன உளைச்சலுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. ஐந்து பேரில் ஒருவருக்கு மன உளைச்சல் தொடர்பான வியாதி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவி புரிய வேண்டும். பல வித காரணங்களுக்காக மன அழுத்தம் வரலாம். நமது கவலைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும். இது போன்று சூழ்நிலைகளைச் சமாளிக்க என் அம்மாதான் எனது பெரிய சக்தியாக விளங்குகிறார்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை சீராக இருக்க ஒரு ஆலோசகரின் தேவை மிக அவசியமானது. எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும் மனநல மருத்துவரையோ அல்லது மன அழுத்தம் தொடர்பான ஆலோசகரையோ நியமிக்க வேண்டும்” எனக் கூறினார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*