By February 24, 20180 CommentsReport

இமான்-ஷ்ரேயா: மெலடி கூட்டணி..!!

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திற்காக மீண்டும் ஷ்ரேயா கோஷலை பாட வைத்திருக்கிறார் டி.இமான்.

பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் சீமராஜா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என பொன்ராம் இயக்கிய இரு படங்களுக்கும் இசையமைத்த இமான், சீமராஜா படத்திலும் தனது இசையால் ரசிகர்களைக் கவரவிருக்கிறார்.

இந்நிலையில் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ‘பாக்காத பாக்காத’ மற்றும் ரஜினிமுருகனில் ‘ஒம்மேல ஒரு கண்ணு’ என தம்பி சிவகார்த்திகேயனுக்காக இரண்டு பாடல்களை தந்தேன். அதேபோல சீமராஜா படத்திலும் பாடும் பறவையான ஷ்ரேயா கோஷலுடன் இணைந்து ஒரு மெலடி பாடலை உருவாக்கியிருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திற்கும் மெலடிக்கான இடத்தைத் தரும் பொன்ராமிற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

‘தான் எப்போது கூப்பிட்டாலும் எங்கிருந்தாலும் உடனே வந்து பாடிக் கொடுத்துப் போகிறவர்’ என ஷ்ரேயா கோஷலை தனது 100வது படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் இமான். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பல மொழிகளில் பிஸியாக பாடி வரும் அவர், இமானுக்காக ஒரு பாடலை பாடிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நடிகை சிம்ரன் முதல்முறையாக மிரட்டும் வில்லியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*