By February 24, 20180 CommentsReport

சல்மான் – கேத்ரினா மீது தலித் அமைப்புகள் வழக்கு..!!

பாலிவுட் நடிகர் சல்மான் கான், கேத்ரினா கைஃப், ஷில்பா ஷெட்டி ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதாகக் கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் டைகர் ஜிண்டா ஹை படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கான் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கக்கூடிய ‘பாங்கி’ என்ற சொல்லை நகைச்சுவையாகப் பயன்படுத்தினார். இதன் காரணமாக மும்பையில் உள்ள அந்தேரி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு பேட்டியின்போது இதே வார்த்தையை உபயோகித்த ஷில்பா ஷெட்டி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தி குயிண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ரோஜ்கர் அகாரி ரிபப்ளிகேஷன் பார்ட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பின் துணைத் தலைவர் கிஷோர் மசூம், “சல்மான், ஷில்பாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தோம். சல்மான் கான் வீட்டின் முன் போராட்டம் நடத்தினோம். காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். சட்டப்படி அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் நவின் ராமச்சந்திர லாட் மற்றொரு புகாரையும் சமீபத்தில் அளித்துள்ளார். அவரது வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், “சல்மானோடு கேத்ரினாவும் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொண்டுள்ளார். ஷில்பா ஷெட்டி ஒரு பேட்டியின் போது, “நான் பாங்கி போல் உள்ளேன்” என்று கூறியுள்ளார். அவரது கூற்றில் இழிவுபடுத்தும் இந்தச் சொல்லை அவர் பரப்புவது தெரிகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டம் 2015, குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955 ஆகியவற்றின் கீழ் இவர்கள் செய்தது குற்றம்” என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ‘வால்மீகி கம்யூனிட்டி’ என்னும் அமைப்பு சார்பாக ஜெய்ப்பூரிலும் சல்மான் கான் மீதும் டிசம்பர் மாதம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*