By February 26, 20180 CommentsReport

தமிழ் ரசிகர்களின் ஆதரவால் வளர்ந்தேன்: சாய் பல்லவி..!!

‘தமிழ் ரசிகர்களின் ஆதரவால் தான் சினிமாத் துறையில் வளர்ந்திருக்கிறேன்’ என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தி.நகர் ரெசிடென்சி டவரில் நேற்று (பிப்ரவரி 24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாய் பல்லவி, இயக்குநர் விஜய், மதன் கார்க்கி, வசனகர்த்தா அஜயன் பாலா, நிழல்கள் ரவி, நடிகர் சந்தான பாரதி, ரேகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய சாய் பல்லவி விழாவுக்குத் தனக்கே உரிய பாணியில் புடவை கட்டி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து பேச தொடங்கிய அவர், “எல்லோருக்கும் வணக்கம். நான் நடிக்க ஆரம்பிச்சது கோஇன்சிடென்டா தான் நடந்துச்சு. இப்படி தற்செயலா நடிக்க வந்த எனக்கு இவ்வளவு அன்பு கொடுத்தது; ஆதரவு கொடுத்தது தமிழ் ஆடியன்ஸ்தான். நீங்க எல்லாம் இல்லன்னா கண்டிப்பா நான் இந்த மேடையில நின்னு பேசிட்டு இருக்க முடியாது. தமிழ் படத்தோட மேடையில வந்து தாங்க்யூ சொல்லணும்னு நெனைச்சிட்டு இருந்தேன். எல்லாருக்கும் ரொம்ப தாங்க்ஸ். நீங்க இல்லன்னா இதெல்லாம் நடந்திருக்காது” என்று தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

“என்கிட்ட இவ்ளோ லவ் சேரும்போது ரெஸ்பான்ஸ்பிலிட்டியும் சேர்ந்து வந்துச்சு. அதனால் யாரும் என்ன பார்க்கும்போது எப்போ தமிழ் படம் பண்ணுறீங்கனு கேட்கும்போது பயம் வரும். ஃபர்ஸ்ட் டைம் பண்ணும்போது நல்ல படமா பண்ணணும். இவ்ளோ அன்புக்கு நம்ம ரெஸ்பான்சிபிலா இருக்கணும்னு நெனச்சேன். அதான் இந்த பிலிம். விஜய் சார் என்கிட்ட கரு பத்தி சொல்லும்போது நான் நெனச்சேன், நம்ம இவ்ளோ நாள் வெயிட் பண்ண படம் இதுதான்னு எனக்கு தோணுச்சு” என்று குறிப்பிட்டார்.

இதே அனுபவத்தை விஜய் பேசும் போது, “சாய் பல்லவி நிறையப் படங்களை நிராகரித்துக்கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் அவரை இந்தப் படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின் கதையை சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்தோம்” என்று நினைவு கூர்ந்தார்.

கரு படத்தின் அனுபவத்தைச் சொல்லும்போதே மகிழ்ச்சியில் திளைத்த சாய் பல்லவி, அதை தன் பேச்சிலும் வெளிப்படுத்தினார். “இப்போ இந்தப் படத்தை பார்க்கும்போது நெறைய மெமரிஸ் வருது. எப்பவும் சொல்லுவாங்க… ஒரு படத்துல வொர்க் பண்ணணும்னா அந்தப் படத்தோடு அட்டாச் ஆகிடுவோம்னு. நானும் இந்தப் படம் முடிஞ்சி போகும்போது அப்படித்தான் நெனச்சேன். அந்த அளவுக்கு இந்த படம் இருந்துச்சு. ஸோ தாங்க்ஸ் டு விஜய் சார். அதே மாதிரி ஷூட்டிங்கில அழுகுற சீன்லாம் முடிஞ்சி கட் சொல்லும்போது எல்லாரும் பேபியை தான் பார்ப்பாங்க. நான் விஜய் சார் கிட்ட சொல்லுவேன், என்ன சார் யாரும் என்ன பார்க்க மாட்டுறீங்கனு? என்னையும் கொஞ்சம் நல்லா நடிக்க வைங்கன்னு. அந்த அளவுக்கு அவங்க நடிச்சாங்க. பேபி வெரோனிகாவோடு நடிச்சது தான் எனக்கு பிரஷரா இருந்துச்சி” என்று வெரோனிகாவோடு நடித்த அனுபவத்தைக் கூறி மகிழ்ந்தார்.

சாய் பல்லவி கூறியதை ஆமோதிக்கும் வகையில் குழந்தை நட்சத்திரமான வெரோனிகாவைப் பற்றிப் பேசிய விஜய்யும், “போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறையத் தேடல்களுக்கு பிறகு இந்தக் குழந்தையை கண்டுபிடித்தோம். தெய்வத்திருமகள் சாராவுக்குப் பிறகு இந்தக் குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் “கரு என் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறேன். கரு படத்தின் கதையை லைகாவிடம் சொன்னேன். இந்தப் படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்குத் தான் பண்ணணும் என்று கூறினார்கள். படத்தின் பெரிய பலமே சாய் பல்லவிதான். அவரை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப்பெரிய நடிகையாக வருவார். அவருக்கு நிச்சயம் தமிழில் இந்தப் படம் பெரிய திருப்பத்தைக் கொடுக்கும்” என்று சாய் பல்லவியைப் புகழ்ந்து பேசினார் இயக்குநர் விஜய்.

ஆனால், அதற்கு பெருந்தன்மையாக, “இந்தப் படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் விஜய் சார் தான். ஒரு சீனில் எப்படி நடிக்கணும், எப்படி நடிக்கக் கூடாது, இந்த சீனுக்கு இவ்ளோ எக்ஸ்ப்ரெஷன் இருந்தா போதும் அப்படின்னு ஒவ்வொன்னும் எனக்குச் சொல்லிக் கொடுத்தது டைரக்டர் தான். அதே போல முன்னணி நடிகை ஆகணும்னு ஆசையில்லை. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிச்சாலே போதும்” என்று கூறி சிரித்தார்.

இதைத் தொடர்ந்து படக்குழுவுக்கு நன்றி சொன்ன இயக்குநர், “நிரவ் ஷாவுக்கு 2013லேயே இந்தக் கதை தெரியும். இந்த நேரத்துக்காகத் தான் காத்திருந்தோம். எடிட்டர் ஆண்டனி இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப்பெரிய பலம் மதன் கார்க்கி. நான் சொல்ல விரும்புவதை இரண்டு நிமிடங்களில் பாடலாகச் சொல்லி விடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்குப் பொருத்தமான இசையைக் கொடுத்திருக்கிறார்” என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*