நானும் அரசியலுக்கு வருவேன்..!!
‘தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நானும் அரசியலுக்கு வருவேன்; குரல் கொடுப்பேன்’ என நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிம்பு, அரவிந்த் சாமி ஆகிய இருவரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ‘தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தனக்கு இடையூறு செய்கிறார்கள்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார் சிம்பு.
இது குறித்து சிம்பு புதிய தலைமுறைக்கு அளித்துள்ள தொலைபேசி பேட்டியில், “மணிரத்னம் சார் படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காக இங்கே வந்து பிரச்னை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு நடிகனாக நடிகர் சங்கத்தில் பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன் உள்ளிட்டோரிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். அவர்களும் நடிகர்கள் சங்கத்தில் பேசிக் கொள்ள சொல்லிவிட்டார்கள். அப்படி இருக்கையில் எதற்காக இங்கே வந்து பிரச்னை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்த படம் (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் அது சம்பந்தமாகப் புகார் அளிப்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது எனத் தெரியவில்லை. எனக்கு எதிராக யார் இருக்கிறார்கள் எனத் தெரியாமல் விஷால் மீது குறை சொல்வதும் தவறு” என ஆதங்கப்பட்டுள்ளார்.
அரசியல் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்த சிம்பு, “நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வது தவறு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரலாம், வரக்கூடாது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக மக்களுக்குப் பிரச்னை என்றால், அனைவரும் ஒன்று சேரும்போது நானும் இணைவேன். ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு எப்படி குரல் கொடுத்தேனோ அதுபோல தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானும் அரசியலுக்கு வருவேன்; குரல் கொடுப்பேன்” என்று பேசியுள்ளார்.