By February 28, 20180 CommentsReport

ரஜினி படத்தில் விஜய் சேதுபதி?..!!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இதில் மேலும் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்விதமாக விஜய்சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. 2.0 படத்தின் பணிகளும் மற்றொரு பக்கம் நடைபெற்றுவருகின்றன. ரஜினி அரசியலில் இறங்கவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து இனி படங்களில் நடிப்பாரா என்று எழுந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு அமைந்திருந்தது.

ரஜினியின் ஒவ்வொரு பட அறிவிப்பின் போதும் அதில் இணைந்து நடிக்கவுள்ள நடிகை யார், துணை நடிகர்கள் யார், என்ன மாதிரியான கதைக்களம் என்பவை பற்றிய செய்திகள் அதிகளவில் வலம் வரும். அந்தவகையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் பீட்சா, இறைவி படங்களில் கதாநாயகனாகவும், ஜிகர்தண்டா படத்தில் சிறப்புத்தோற்றத்திலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். திரைத்துறைக்கு வரும் முன்னரே இருவரும் நண்பர்களாக இருந்துவருகின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்த விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


Post a Comment

CAPTCHA
Refresh

*