சமுத்திரக்கனியை இயக்கும் பார்த்திபன்..!!
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இதில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பார்த்திபனின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது 1993ஆம் ஆண்டு வெளியான உள்ளே வெளியே. பார்த்திபன் இயக்கி நடித்த அந்தப் படத்தில் அவரது முன்னாள் மனைவி சீதா இணைந்து நடித்திருந்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி, சில்க் ஸ்மிதா, ஐஸ்வர்யா, தளபதி தினேஷ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் பாடல்களும் வரவேற்புப் பெற்றன.
நீண்ட இடைவெளிக்குப் பின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை இயக்கிய பார்த்திபன் இளம் இயக்குநர்களுடன் போட்டி போடும் அளவுக்குப் புதுமையான கதைக்களத்தாலும் கதைசொல்லல் முறையாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். அடுத்ததாக அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். தற்போது அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பார்த்திபன், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், மம்தா மோகன் தாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பார்த்திபனும் சமுத்திரக்கனியும் சூர்யா நடித்த மாஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து உள்ளே வெளியே 2வில் மீண்டும் இணையவுள்ளனர். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.